மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை
தேனி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேனி:
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்கீழ் பரிசோதனையின் மூலம் பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற சுகாதார தேவைகளை வழங்குவதோடு, நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் இல்லம் தேடி மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 85 ஆயிரத்து 168 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சை, 41 ஆயிரத்து 991 பேருக்கு நீரிழிவு நோய் சிகிச்சை, 46 ஆயிரத்து 494 பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை, 16 ஆயிரத்து 485 பேருக்கு நோய் தடுப்பு சிகிச்சை, 25 ஆயிரத்து 444 பேருக்கு உடற்பயிற்சி சிகிச்சை, 17 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 599 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story