கடமலைக்குண்டுவில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்து அதிகாரி அதிரடி உத்தரவு


கடமலைக்குண்டுவில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்து அதிகாரி அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2022 9:11 PM IST (Updated: 2 March 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டுவில் தடுப்பணை கட்டும் பணியை ஆய்வு செய்த அதிகாரி, அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, தடுப்பணை, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகளை ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் அனிதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரும்பாலான பணிகளுக்கு அரசு ஒப்புதல் இல்லாத சிமெண்டு மூட்டைகள் பயன்படுத்துவதை கண்டுபிடித்தார். இதையடுத்து வரும் நாட்களில் அனைத்து பணிகளுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ள சிமெண்டு மூட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், இதனை ஒன்றிய பொறியாளர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். 
பின்னர் கடமலைக்குண்டுவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணிகளை அதிகாரி அனிதா ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டிருந்த 17 மீட்டர் நீளமுடைய தடுப்பணையின் அடித்தள பகுதியை இடித்துவிட்டு மீண்டும் கட்டுமாறு உத்தரவிட்டார். 
இதேபோல் தரம் குறித்து கண்டறிவதற்காக தடுப்பணையின் சிமெண்டு பகுதிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின்போது கடமலை-மயிலை ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதிமுத்து, கண்ணன், கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story