கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 153 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 153 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 March 2022 10:12 PM IST (Updated: 2 March 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 153 வார்டு கவுன்சிலர்கள் பதவிஏற்றுக்கொண்டனர்

கள்ளக்குறிச்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 24 வார்டுகள், திருக்கோவிலூர் நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 72 நகராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள், தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள், சின்னசேலம் பேரூராட்சியில் 18 வார்டுகள், மணலூர்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள், வடக்கனந்தல் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 81 வார்டுகள் என நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 153 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 12 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 141 பதவிகளுக்கு கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

பதவியேற்பு விழா

இந்த தேர்தலில் வெற்றிபெற்ற 141 வார்டு கவுன்சிலர்கள், போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட 12 கவுன்சிலர்கள் என மொத்தம் 153 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்பு விழா அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவிஏற்பு விழாவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான குமரன் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 14 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், காங்கிரஸ், அ.ம.மு.க. கவுன்சிலர்கள் தலா ஒருவர் என மொத்தம் 21 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வக்கீல் தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்கள் செல்வராஜ், தேவிமுருகன், நகரசபை ஆணையர் கீதா ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 20 பேர்,  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், சுயேச்சைகள் 2 பேர் என மொத்தம் 27 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.  

தியாகதுருகம், வடக்கனந்தல்

தியாகதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவிஏற்பு விழாவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் 14 தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு தே.மு.தி.க. கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 
வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவிஏற்பு விழாவில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் 18 தி.மு.க.கவுன்சிலர்களில் பதவி ஏற்றுக்கொண்டனர். 

மணலூர்பேட்டை 

மணலூர்பேட்டை பேரூராட்சி அலுவலத்தில் நடைபெற்ற பதவிஏற்பு விழாவில் தேர்தல் நடத்தும் அலுவலரும் செயல் அலுவலருமான மேகநாதன், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. சார்பில் அவரது தம்பி வசந்தம்வேலு, நகர தி.மு.க.செயலாளர் ஜெயகேணஷ், ரிஷிவந்தியம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாரதிதாசன், பெருமாள் ஆகியோர் முன்னிலையில் 11 தி.மு.க. கவுன்சிலர்கள், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பதவிஏற்றுக்கொண்டனர். 
இதேபோல் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 24 கவுன்சிலர்கள், சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் 15 கவுன்சிலர்கள், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் 18 கவுன்சிலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டர்.


Next Story