டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை: நாகையில், கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்
நாகையில் சுகாதாரத்துறையினர் வாடிக்கையாளர்போல் நடித்து மருந்து கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:-
நாகையில் சுகாதாரத்துறையினர் வாடிக்கையாளர்போல் நடித்து மருந்து கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கருக்கலைப்பு மாத்திரைகள்
நாகை மாவட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் மகப்பேறு டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதை வாங்கி சாப்பிடும் பெண்கள் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அருண்தம்புராஜ் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி நாகை அருகே புத்தூர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடைக்கு நேற்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாடிக்கையாளர்கள் போல் சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்டுள்ளனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
அப்போது கடையில் இருந்தவர்கள் ரூ.340-க்கு விற்பனை செய்ய வேண்டிய மாத்திரையை ரூ.2 ஆயிரத்து 500-க்கு, டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமே விற்பனை செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக கடையில் இருந்த 5 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
எச்சரிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளை மருந்து ஆய்வாளரிடம் ஒப்படைத்து மேல் நடவடிக்கை எடுக்க சுகாதாத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் சட்டவிரோதமாக மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது என்றும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story