நாகை மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு


நாகை மாவட்டத்தில் 4 பேரூராட்சிகளில் 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 3 March 2022 12:15 AM IST (Updated: 2 March 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் 60 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

வேளாங்கண்ணி:-

நாகை மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் 60 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

4 பேரூராட்சிகள்

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு, திட்டச்சேரி ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பேரூராட்சியிலும் 15 வார்டுகள் என மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22-ந் தேதி எண்ணப்பட்டு, வெற்றி வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று பேரூராட்சி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்கான விழா அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடந்தது. 

வேளாங்கண்ணி 

வேளாங்கண்ணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க. 12 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். இவர்களுக்கு பேரூராட்சியின் செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான திருஞானசம்பந்தம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

கீழ்வேளூர் 

கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க. 8 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 2 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்றின. சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் ‌15 பேரும் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 
விழாவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துக்குமரன், சந்திரகலா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராசன், பழனியப்பன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சித்ரகலா, வரித்தண்டலர் மதன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திட்டச்சேரி 

15 வார்டுகளை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் 8 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். தி.மு.க.வுக்கு 6 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு ஒரு இடமும் கிடைத்தது. இங்கு நேற்று 15 உறுப்பினர்களும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கென்னடி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரித்தண்டலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தலைஞாயிறு பேரூராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 8 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 7 பேரும் என மொத்தம் 15 உறுப்பினர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

Next Story