தர்மபுரி மாவட்டத்தில் அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயான கொள்ளை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் தாண்டவேஸ்வரர்-அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பிரார்த்தனைதாரர்களுக்கு அலகு குத்துதலும், மதியம் அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயானம் நோக்கி செல்லுதலும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பேய் விரட்டும் நிகழ்ச்சி
தொடர்ந்து குமாரசாமிப்பேட்டை மயானத்தில் மயான கொள்ளை திருவிழா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு பூ பல்லக்கு ரதத்தில் அம்மன் திருவீதி உலாவும், அம்மனுக்கு பன்னீர் அபிஷேகமும் நடந்தது.
இதேபோன்று தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் பூத வாகனத்தில் மயானத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எஸ்.வி. ரோடு அங்காளம்மன் கோவிலில் இருந்து அம்மன் பூத வாகனத்தில் மயானம் நோக்கி திருவீதி உலா நடைபெற்றது.
பக்தர்களுக்கு சாட்டையடி
இந்த 2 கோவில் சார்பில் தர்மபுரி பச்சியம்மன் கோவில் மயானத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பேய் விரட்டும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் நிகழ்ச்சியும், சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அன்னசாகரம் அங்காளம்மன் கோவில், பென்னாகரம் ரோடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்காளம்மன் கோவில்களிலும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அ.பாப்பாரப்பட்டி
அ.பாப்பாரப்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி மயான கொள்ளை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் இரவு திருவீதி உலா, சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று மயான கொள்ளை மற்றும் பிள்ளை பாவு சுற்றுதல் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story