தர்மபுரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்பு ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்


தர்மபுரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்பு ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
x
தினத்தந்தி 2 March 2022 10:54 PM IST (Updated: 2 March 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழா
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேர் கவுன்சிலர்களாக பதவி ஏற்கும் விழா தர்மபுரி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சுகுமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். தேர்தல் பார்வையாளர் பாபு முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அனைவருக்கும் நகராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி உதவி பொறியாளர் சரவணபாபு நன்றி கூறினார்.
வாழ்த்து
விழா நடைபெற்ற கூட்ட அரங்கில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்.இ.டி. திரை மூலம் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர். பதவி ஏற்றுக்கொண்ட நகராட்சி கவுன்சிலர்களுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி புதிய கவுன்சிலர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகர பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இதே போன்று அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த பதவியேற்பு விழாவையொட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story