விராலிமலை அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது
காதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விராலிமலை:
விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன் (வயது 23). இவர் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலு காதலித்து வந்த பெண்ணுடன் விராலிமலையை சேர்ந்த முகமது யாகூப் மகன் ரசூல் (25) என்பவர் பேசி பழகி வந்துள்ளார். இதை பிடிக்காத பாலு அவரது காதலியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் பாலுவின் வீட்டிற்கு சென்று கண்டித்தனர். மேலும் அப்பெண் பாலுவிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திவிட்டு ரசூலிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விராலிமலை அருகே உள்ள விராலூரில் பூமீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவிற்கு ரசூல் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாலு மற்றும் அவரது நண்பர்கள் ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியதில் பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரசூலை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த விராலிமலை போலீசார் பாலுவின் நண்பரான விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் (35) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலு, அருண், சக்தி ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story