பெரியாளூர் கிராமத்தில், மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்து நாசம்


பெரியாளூர் கிராமத்தில், மின்கம்பிகள் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 March 2022 12:07 AM IST (Updated: 3 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

பெரியாளூர் கிராமத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தாழ்வாக சென்ற மின்கம்பிகளில் உரசியதில் தீப்பற்றி எரிந்து நாசமானது.

கீரமங்கலம்:
மின்கம்பிகள் உரசி தீ
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே அம்பலவானனேந்தர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 60). இவருக்கு சொந்தமான சரக்கு லாரியில் ஒக்கூர் கிராமத்தை சேர்ந்த சேகர் (32) நேற்று வைக்கோல் ஏற்றி கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி கிராமத்திற்கு ஓட்டி வந்துள்ளார். பெரியாளூர் கிராமத்தில் சென்ற போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசி தீ பற்றியதால் வைக்கோலுடன் லாரியும் சேர்ந்து எரிந்தது. லாரியிலிருந்த வைக்கோலை அகற்றுவதற்குள் லாரியும் எரிந்து நாசமானது. கீரமங்கலம் தீயணைப்பு படையினர் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் சம்பவம்
தற்போது நெல் அறுவடை முடிந்து வயல்களில் பரவிக்கிடக்கும் வைக்கோலை கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மொத்தமாக வாங்கி வந்து கால்நடைகளுக்காக சேமித்து வைக்கின்றனர். அதனால் ஆவுடையார்கோவில் பகுதியிலிருந்த ஒவ்வொரு நாளும் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வைக்கோல் ஏற்றி வரப்படுகிறது.  கடந்த ஒரு வாரத்திற்குள் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வைக்கோல் ஏற்றி வந்த பல வாகனங்களில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உரசி தீப்பற்றி எரிந்து நாசமாகி உள்ளது. 
சேந்தன்குடி, குளமங்கலம், பெரியாளூர் உள்பட பல கிராமங்களில் வைக்கோல் ஏற்றி சென்ற வாகனங்கள் எரிந்துள்ளது. அதனால் கிராமச் சாலைகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்திக் கட்டினால் இது போன்ற விபத்துகளை தடுக்கலாம் என்கிறார்கள் பொதுமக்கள்.

Next Story