கோவில்களில் விடிய, விடிய சிவராத்திரி விழா கோலாகலம்
கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய சிவராத்திரி விழா கோவில்களில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது.
இதையொட்டி காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகமும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சாயரட்சையும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மூன்று கால பூஜைகளும், லிங்கோத்பவர் அபிஷேகமும் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் 4-ம் கால பூஜை நடைபெற்று, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
கோபுர தரிசனம்
தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுடன் கைலாய வாத்தியங்கள் முழங்க மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ராஜகோபுரத்தை வந்தடைந்தார். அங்கு சாமிக்கு தூப, தீபங்கள் காண்பிக்கப்பட்டு தரிசனம் நடந்தது. அதன்பிறகு ராஜகோபுரம் கதவு திறக்கப்பட்டு, அதி உன்னத கோபுர தரிசன காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அதையடுத்து சாமி ராஜ வீதிகளில் வலம் வந்து, கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு சாமிக்கு அர்த்தசாம பூஜை நடைபெற்று சிவராத்திரி விழா நிறைவுபெற்றது. முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும்
இதேபோல் மாவட்டத்தில் பண்ருட்டி திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் என்று மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடியற்காலை வரையில் சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story