வேலூரில் மயான கொள்ளை திருவிழா
வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வேலூர்
வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மயான கொள்ளை திருவிழா
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் பின்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போல வேடமிட்டு சென்றனர்.
காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச் சென்றதும் தத்ரூபமாக இருந்தது. ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டும் சென்றனர்.
சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்குள்ள மயானத்தை அடைந்தது. இளைஞர்கள் பல இடங்களில் ஆரவாரம் செய்தனர்.
சிறப்பு பூஜை
வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் பாலாற்றங்கரைக்கு சாமியுடன் ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது.
அதுபோல பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கும் சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பின்னர் தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். அப்போது வழியில் இருந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
பலத்த பாதுகாப்பு
மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாதாரண உடையிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதுபோல மயானக் கொள்ளை ஊர்வலத்திலும் போலீசார் சென்றனர். ட்ரோன் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேலூர், காட்பாடியில் 12 தேர்களில் சாமி ஊர்வலம் நடந்தது. சில தேர்கள் ஆங்காங்கே உள்ள மயானத்துக்கு சென்றது. ஒரு தேருக்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேலூர், காட்பாடியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு தேரும் பாலாற்றுக்கு கொண்டு வரப்பட்டது. சில தேர்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதை பொதுமக்கள் கூடிநின்று பார்வையிட்டு, அம்மனை வழிபட்டனர். இந்த விழாவையொட்டி வேலூரில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story