10 கோவில்களில் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
திண்டிவனம் பகுதியில் 10 கோவில்களில் திருடியது தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்
மயிலம் அருகே சின்ன வளவனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும், வழக்கம்போல் அதே பகுதியை சேர்ந்த பூசாரியான வெள்ளை என்பவர் கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்வதற்காக வெள்ளை கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் உண்டியலை மர்மநபர்கள் சிலர் உடைத்து கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வெள்ளை அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார். அப்போது பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த மர்மநபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால் அவர்களில் 3 பேரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து மயிலம் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் விழுப்புரம் அருகே சித்தலிங்கமடம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன்கள் ராமச்சந்திரன் (வயது 40), பாண்டியன் (29), அம்மாசி மகன் குமார் (35) என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் ஏழுமலை மகன் கார்த்தி, அம்மாசி மகன்கள் சங்கர், விஜி, செல்வம் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 7 பேரும் திண்டிவனம், மயிலம், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் உள்ள 10 கோவில்களில் திருடியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமச்சந்திரன், பாண்டியன், குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 10 கோவில்களில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story