சுயேச்சை கவுன்சிலருடன் வந்த தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்
பாளையங்கோட்டை ஓட்டலில் சுயேச்சை கவுன்சிலருடன் வந்த தி.மு.க. பிரமுகரை தாக்கியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை ஓட்டலில் சுயேச்சை கவுன்சிலருடன் வந்த தி.மு.க. பிரமுகரை தாக்கியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுயேச்சை கவுன்சிலர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து நேற்று கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இவர்களில் இருந்து மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நகராட்சிகளுக்கு தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் சில பேரூராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சுயேச்சை கவுன்சிலர் காதர் (வயது 30) நேற்று தி.மு.க. பிரமுகர் ராகவனுடன் (33) பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்
அப்போது அங்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த தி.மு.க.வினர் சிலர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கிருந்த பாத்திரத்தை எடுத்து ராகவனை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கன்னத்தில் வெட்டு விழுந்ததில் சட்டை முழுவதும் ரத்தம் வடிந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் விரைந்து சென்று ராகவனை மீட்டு, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story