காபி தோட்ட தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை


காபி தோட்ட தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 3 March 2022 2:27 AM IST (Updated: 3 March 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

சோமவார்பேட்டையில் நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் காபி தோட்ட தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் போலீசில் சரண் அடைந்தார்.

குடகு: சோமவார்பேட்டையில் நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் காபி தோட்ட தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் போலீசில் சரண் அடைந்தார்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சுண்டிகொப்பா அருகே கோவா பகுதியை சேர்ந்தவர் தர்மா (வயது 55). காபி தோட்ட தொழிலாளி. இவரது பெரியப்பா மகன் சிவக்குமார். இந்த நிலையில் அந்தப்பகுதியில் அவர்களுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக தர்மா மற்றும் சிவக்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவக்குமார், தம்பி தர்மாவை சந்தித்து நிலத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு வேண்டாம், சமாதானமாக செல்வோம் என்று கூறியுள்ளார். அதற்கு தர்மாவும் ஒப்புக்கொண்டுள்ளார். 

சுட்டுக் கொலை

இந்த நிலையில், நேற்று காலை தர்மா அந்தப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த சிவக்குமார், கண்இமைக்கும் நேரத்தில் தர்மாவை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில் தர்மாவின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், இதுகுறித்து சுண்டிகொப்பா போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான தர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசில் சரண்

இதற்கிடையே சிவக்குமார், சுண்டிகொப்பா போலீஸ் நிலையத்துக்கு ெசன்று நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சுண்டிகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அண்ணனே துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story