ஏப்ரல் 16-ந்தேதிக்கு பதிலாக 22-ந் தேதி தொடங்குகிறது; கர்நாடக பி.யூ.சி. பொதுத்தேர்வு தேதி திடீர் மாற்றம்


ஏப்ரல் 16-ந்தேதிக்கு பதிலாக 22-ந் தேதி தொடங்குகிறது; கர்நாடக பி.யூ.சி. பொதுத்தேர்வு தேதி திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 3 March 2022 2:35 AM IST (Updated: 3 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பி.யூ.சி. தேர்வு கால அட்டவணையில் திடீரென மாற்றம் செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வு ஏப்ரல் 22-ந் தேதி தொடங்குகிறது.

பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி. தேர்வு கால அட்டவணையில் திடீரென மாற்றம் செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வு ஏப்ரல் 22-ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கால அட்டவணை

கர்நாடகத்தில் பி.யூ.சி. இறுதி ஆண்டு தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி தொடங்கி மே மாதம் 6-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்காக மத்திய அரசு நடத்தும் ஜே.இ.இ. தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பி.யூ.சி. தேர்வும், ஜே.இ.இ. தேர்வும் ஒரே நேரத்தில் வருவதால், மாணவர்களின் நலன் கருதி பி.யூ.சி. இறுதி ஆண்டு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளோம்.

அதாவது பி.யூ.சி. தேர்வு 16-ந் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 22-ந் தேதி தொடங்கும். ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தொடங்கும் இந்த தேர்வு மே மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான ஏப்ரல் 22-ந்தேதி வணிக படிப்பு தேர்வு, 23-ந் தேதி இந்தி, 25-ந் தேதி பொருளியல், 26-ந் தேதி வேதியியல், 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராட்டி, சமஸ்கிருதம், 28-ந் தேதி கன்னடம், 30-ந் தேதி கணினி அறிவியல், சமூகவியல், மே 2-ந் தேதி உயிரியல், 4-ந் தேதி ஆங்கிலம், 6-ந் தேதி கணிதம், 7-ந் தேதி கணக்குப்பதிவியல், மனை அறிவியல், 9-ந் தேதி இயற்பியல், வரலாறு, 11-ந் தேதி அரசியல் அறிவியல், புள்ளியியல் பாடத்தேர்வுகள் நடைபெறும்.

2 ஆண்டுகளுக்கு பிறகு...

இது தற்காலிக கால அட்டவணை தான். இந்த கால அட்டவணையில் யாருக்காவது ஆட்சேபனைகள் இருந்தால் அதை வருகிற 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். jdexam.dpue@gmail.com என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பி.யூ.சி. தேர்வு நடத்தப்படவில்லை. அதாவது அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு தேதி கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த கால அட்டவணையிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story