கல்லணைக்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம்
கல்லணைக்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர்;
தஞ்சை காந்திஜிசாலையில் கல்லணைக்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.
புதிய பாலம்
தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்திஜிசாலை மிக முக்கியமான சாலையாகும். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காந்திஜிசாலையின் வழியாக தான் சென்று வருகின்றன.
இப்படிப்பட்ட காந்திஜிசாலையில் இர்வீன்பாலம் உள்ளது. இந்த பாலம் கல்லணைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் பழமையான பாலமாகும். பாலம் பழுதடைந்து காணப்படுவதால் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணி தொடங்கியது
அதன்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லணைக்கால்வாயின் குறுக்கே 37 மீட்டர் நீளத்தில் 2 பாலம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு பாலமும் தலா ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.
இந்தநிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்றுகாலை நடந்தது. பின்னர் புதிய பாலம் கட்டுவதற்கு வசதியாக கல்லணைக்கால்வாயின் கரையில் போடப்பட்டுள்ள நடைபாதை மற்றும் நடைபாதையின் இருபுறமும் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
பாலம் கட்டுவதற்கு தேவைப்படும் அளவுக்கு நடைபாதை அகற்றப்பட்டதுடன் தரைகள் சமப்படுத்தப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த பாலப்பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story