அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
அரியலூர்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, பாரதீய ஜனதா, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 89 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் 3 பேர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றனர்.
பதவி ஏற்பு
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமபலம் பெற்றன. இதன் காரணமாக நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றப்போவது யார்? என்ற பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கரை 3 சுயேச்சைகள் சந்தித்து தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்ததால் நகராட்சி பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
இந்தநிலையில் அரியலூர் நகராட்சியில் வெற்றி பெற்ற 18 கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். நகராட்சி ஆணையர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில், தி.மு.க கவுன்சிலர்கள் 10 பேர் பதவி ஏற்றனர். பின்னர், சுயேச்சை மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 10 வார்டுகளையும், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. வினர் தலா 4 வார்டுகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 வார்டுகளையும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.
அவர்கள் முறையாக கவுன்சிலர்களாக பதவி ஏற்கும் விழா ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சுபாஷினி 21 கவுன்சிலர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு பின்னர் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் 11 பெண் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ரோஜாப்பூ கொடுத்து ஆணையர் வாழ்த்து
அதனைத்தொடர்ந்து ஆணையர் அனைத்து கவுன்சிலர்களுக்கும் சால்வை மற்றும் ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். பதவி ஏற்பு விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்களின் உறவினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story