அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை ஊழியர்
மேட்டூர் அணை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முருகனுடைய செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். அப்போது அவரிடம் ரூ.1 லட்சம் கடன் தருவதாக மர்ம நபர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அந்த நபர் தெரிவித்த வங்கிக்கணக்குக்கு பல தவணையாக முருகன் ரூ.85 ஆயிரத்து 360 வரை செலுத்தினார். ஆனால் அவருக்கு ரூ.1 லட்சம் கடன் ஏதும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (59). இவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் அவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கி புகார் தொடர்பான குறுஞ்செய்தி ஒன்று வந்தது. மேலும் அதில் குறிப்பிடப்பட்ட லிங்கை வெங்கடாசலம் கிளிக் செய்தவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் இணையதளம் வந்தது.
இதையடுத்து அதில் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களையும், ஓ.டி.பி. எண்ணையும் வெங்கடாசலம் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.59 ஆயிரத்து 697 அபேஸ் செய்யப்பட்டது. பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கடாசலம் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story