சேலம் மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு-ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழா
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 47 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில் அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்தநிலையில், சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 60 உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பதவி பிரமாணம்
இதைத்தொடர்ந்து 1 முதல் 60 வார்டுகள் வரை ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டும், சிலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதேபோல், அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டும், அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பதவி பிரமாணம் செய்தனர்.
47 பேர் புதுமுகங்கள்
சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 60 வார்டு உறுப்பினர்களில் 31 பேர் பெண்கள் ஆவர். மீதமுள்ள 29 பேர் மட்டுமே ஆண்கள். இவர்களில் 13 பேர் மட்டுமே ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இதனால் 47 கவுன்சிலர்கள் புதுமுகமாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
44-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவர்மன், 48-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் விஜயா ஆகியோர் விழா மேடையில் ஆனந்த கண்ணீருடன் பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவையொட்டி மாநகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், மாநகர நகர்நல அலுவலர் யோகானந்த், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட அரசு அதிகாரிகளும், பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story