திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 3 March 2022 6:39 PM IST (Updated: 3 March 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, திருநின்றவூர் உள்பட 6 நகராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

பதவிப்பிரமாணம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகளும், 8 பேரூராட்சிகளும் அமைந்துள்ளன. இவற்றில் அமைந்துள்ள திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ், பா.ம.க. தலா ஒரு வார்டிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர் மீரான் ஒலி 27 வார்டு கவுன்சிலர்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திருத்தணி

திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்கள், சுயேச்சை 1 இடங்களில் நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் வெற்றி பெற்ற அனைத்து கட்சி கவுன்சிலர்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான ராமஜெயம் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்ததையடுத்து, பதவி ஏற்றனர். இதில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநின்றவூர்

திருநின்றவூர் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க. 15 இடங்களிலும், அ.தி.மு.க 3 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், சுயேச்சை மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், வி.சி.க, ம.தி.மு.க. தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் 27 பேருக்கும் திருநின்றவூர் நகராட்சி ஆணையர் கணேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 27 உறுப்பினர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பதவி ஏற்றுக்கொண்டனர்.

பொன்னேரி

பொன்னேரி நகராட்சியில் நடந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டுகளிலும், அ.தி.மு.க.வினர் 9 பேர் மற்றும் சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற 27 வார்டு கவுன்சிலர்களும் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான தனலட்சுமி முன்னிலையில் நேற்று பதவியேற்று கொண்டனர்.

திருவேற்காடு

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 இடங்களில் தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 6 பேரும் வெற்றி பெற்றனர். இவர்கள் 18 பேரும் நேற்று திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

பூந்தமல்லி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க.-12, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-2, சுயேச்சைகள்-6 வார்டுகளில் வெற்றி பெற்றனர். பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று காலை கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் கவுன்சிலர்கள் 21 பேரும் தேர்தல் நடத்தும் அதிகாரி நாராயணன் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

நகரமன்ற தலைவர்

நாளை(வெள்ளிக்கிழமை) நகரமன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் காலையிலும், நகர மன்ற துணைத் தலைவர்கான தேர்தல் மதியம் நடைபெற உள்ளது. அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் நகர மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் யார்? என தெரிய வரும்.


Next Story