மாவோயிஸ்டு சாவித்திரி, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


மாவோயிஸ்டு சாவித்திரி, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 3 March 2022 7:22 PM IST (Updated: 3 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டு சாவித்திரி, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

ஊட்டி

தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பையில், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அரசுக்கு எதிராகவும், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கோரியும் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களை ஒட்டினர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் கொடுத்த தகவலின்பேரில் கொலக்கம்பை போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மாவோயிஸ்டுகளான கோவையை சேர்ந்த டேனிஷ் என்ற கிருஷ்ணன், கர்நாடகாவை சேர்ந்த ஷோபா ஆகியோரை கைது செய்தனர். 
இதற்கிடையில் கடந்த 9.11.2021 அன்று வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு மாவோயிஸ்டு கர்நாடகாவை சேர்ந்த சாவித்திரியை கேரள போலீசார் கைது செய்தனர். 

திருச்சூர் சிறையில் உள்ள அவரிடம், நெடுகல்கம்பையில் நடந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த ஊட்டி கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர். அதன்படி திருச்சூர் சிறையில் இருந்து சாவித்ரியை ஊட்டிக்கு கொலக்கொம்பை போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் இன்று மாலையில் ஊட்டி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அங்கு மாவட்ட முதன்மை நீதிபதி இல்லாததால், சாவித்திரியை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். நாளை(வெள்ளிக்கிழமை) அவரை மீண்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர்.


Next Story