விளைச்சல் அதிகரிப்பால் பூண்டு விலை வீழ்ச்சி


விளைச்சல் அதிகரிப்பால் பூண்டு விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 3 March 2022 7:22 PM IST (Updated: 3 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விளைச்சல் அதிகரிப்பால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஊட்டி

ஊட்டியில் விளைச்சல் அதிகரிப்பால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பூண்டு அறுவடை

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. 

தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பூண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கவர்னர்சோலை பகுதியில் விளைநிலத்தில் பயிரிட்ட பூண்டுகளை தொழிலாளர்கள் அறுவடை செய்தனர். முதலில் நிலத்தில் இருந்து செடியுடன் பூண்டு எடுக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் செடிகளை வெட்டி பூண்டுகளை தரம் பிரித்து மூட்டைகளில் நிரப்பினர்.

விலை வீழ்ச்சி

பின்னர் விற்பனைக்காக ஊட்டி நகராட்சி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில நாட்களாக பூண்டு விளைச்சல் அதிகரித்து உள்ளது. வரத்து அதிகரித்ததால் பூண்டு விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. 

இதனால் விவசாயிகள் பராமரிப்பு செலவு, தொழிலாளர்கள் கூலி போன்றவற்றை எடுக்க முடியாமல் கவலை அடைந்து உள்ளனர். பூண்டு முதல் தரம் கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை, 2-வது தரம் ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டும் விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையானது. 

விளைச்சல் அதிகரிப்பு

ஒரு கிலோ கேரட் ரூ.80 முதல் ரூ.90 வரை, பீட்ரூட் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரை, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20 வரை, முட்டைக்கோஸ், காலிபிளவர், பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வருகிறது. வெளியிடங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால் கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கேரட், உருளைக்கிழங்குக்கு நல்ல விலை கிடைக்கிறது. மற்ற காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. இதற்கு காரணம் விளைச்சல் அதிகமாக உள்ளதே ஆகும். மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருவதால், ஊட்டி பூண்டின் விலை குறைந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story