டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியல்


டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2022 7:22 PM IST (Updated: 3 March 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சேரம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சேரம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு தோட்டங்கள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, சிங்கோனா உள்ளிட்ட அரசு தேயிலை தோட்டங்களில்(டேன்டீ) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.342 வழங்கப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இது தவிர சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. 

அங்குள்ள ஆஸ்பத்திரி, தபால் நிலையம் அடைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேயிலை ேதாட்டத்தில் நில அளவை செய்து, அதில் உள்ள சில இடங்கள் தங்களுக்கு உரியது என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். அங்கு பச்சை தேயிலை பறிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சாலை மறியல்

எனவே தினக்கூலியாக ரூ.425.40 வழங்குவது, தேயிலை தோட்டத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதை தடுப்பது, குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியை செய்து கொடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணிக்கு சேரம்பாடி, சிங்கோனா உள்ளிட்ட அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து பந்தலூரில் இருந்து சேரம்பாடி வழியாக கோழிக்கோடு செல்லும் சாலையில் சேரங்கோடு சோதனைச்சாவடியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம், பந்தலூர் தாசில்தார் நடேசன் மறறும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டேன்டீ நிர்வாக இயக்குனர் நேரடியாக வந்து உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தொழிலாளர்கள் கூறினர். 

பரபரப்பு

இதன் காரணமாக அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்தும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். இதை ஏற்று சாலையோரம் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story