பாரம்பரிய உணவுகளை தயாரித்து அசத்திய சுயஉதவிக்குழு பெண்கள்
திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டியில் பாரம்பரிய உணவுகளை தயாரித்து கொண்டு வந்து சுயஉதவிக்குழு பெண்கள் அசத்தினர்.
திண்டுக்கல்:
ஊட்டச்சத்து விழிப்புணர்வு
ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எனவே அதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் விழிப்புணர்வு போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் வட்டார அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி ஏற்கனவே நடத்தப்பட்டன. இதையடுத்து மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதற்கு மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த போட்டியில், 14 வட்டாரங்களில் இருந்தும் தலா 3 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பங்கேற்றன.
இதில் தாய்-கருவில் இருக்கும் சிசு முதல் 2 வயது வரையுள்ள குழந்தைக்கான உணவுகள், ரத்தசோகையில் இருந்து மீட்கும் பாரம்பரிய உணவுகள், புதுமண தம்பதிக்கான சரிவிகித உணவு எனும் தலைப்புகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உணவுகளை தயாரித்து கொண்டு வந்தனர்.
பாரம்பரிய உணவுகள்
இதில் பயறு வகைகள், கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்கள், பல்வேறு கீரை வகைகள், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை கொண்டு நமது பாரம்பரிய முறையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.
அப்போது ஒவ்வொரு உணவிலும் சேர்க்கப்பட்டு இருக்கும் பொருட்கள், உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்களை மகளிர் சுயஉதவிக்குழுவினர் விவரித்தனர். அதன் அடிப்படையில் சிறந்த உணவை தயாரித்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் கொடைக்கானல் குழுவினர் முதலிடத்தையும், குஜிலியம்பாறை குழுவினர் 2-ம் இடத்தையும், ஒட்டன்சத்திரம் குழுவினர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். மேலும் சிறப்பு பரிசுக்கு திண்டுக்கல், நத்தத்தை சேர்ந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் முதல் 3 இடங்களை பிடித்த குழுக்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வினோதா, மாநில வள பயிற்றுனர் நிலாபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story