வாரணாசி கோவிலில் பிரதிஷ்டை செய்ய 9 டன் எடையில் உருவான பிரமாண்ட சிவலிங்கம்
வாரணாசி கோவிலில் பிரதிஷ்டை செய்ய, 9 டன் எடையில் உருவான பிரமாண்ட சிவலிங்கத்துக்கு அகரம் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு:
9 அடி உயர சிவலிங்கம்
தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, 9 டன் எடையில் 9 அடி உயரத்தில் பிரமாண்டமான சிவலிங்கம் நாமக்கல் பகுதியில் தயார் செய்யப்பட்டது.
இதேபோல் 4 அடி உயரத்தில் நந்தி சிலை, 4 அடி உயரத்திலான 12 சிறிய சிவலிங்க சிலைகளும் செய்யப்பட்டன. சிவலிங்கம் மற்றும் சிலைகள் லாரியில் ஏற்றப்பட்டு வாரணாசிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கோவிலில் பிரதிஷ்ைட செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிவலிங்கம் மற்றும் சிலைகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. அதன்படி ராமேசுவரம் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
சிறப்பு பூஜை
பின்னர் அங்கிருந்து சிவலிங்கம் மற்றும் சிலைகள், திண்டுக்கல் வழியாக லாரியில் வாரணாசி நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த லாரி, தாடிக்கொம்புவை அடுத்த அகரத்துக்கு வந்தபோது ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் அகரம் முத்தாலம்மன் கோவில் முன்பு சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிவலிங்கம் மற்றும் சாமி சிலைகள் வாரணாசி நோக்கி லாரியில் கொண்டு செல்லப்பட்டன. 15 மாநிலங்கள் வழியாக, ஆன்மிக யாத்திரையாக சென்று வாரணாசியில் உள்ள கோவிலுக்கு சென்றடைகிறது. அந்த லாரியை, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி ஓட்டிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story