அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2022 8:26 PM IST (Updated: 3 March 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

உடுமலையில்  வகுப்பறை பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினையைத் தொடர்ந்து வகுப்புகளுக்கு போகாமல் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட கல்வி அலுவலகம்
உடுமலை ராஜேந்திரா சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் பரிசோதனை கூடங்கள் கட்டப்பட்டன. பள்ளி வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் உள்ள4 வகுப்பறைகள், முதல் தளத்தில் ஒரு அறை கொண்ட கட்டிடம் ஆகியவை உடுமலை, மாவட்ட கல்வி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்பறைகள்  வேறு இடத்தில் கட்டப்படும் வரை,  கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்த அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கேந்திரிய வித்யாலயா பள்ளி  இந்த பள்ளி வளாகத்தில் 11 வகுப்பறைகளில் செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 7ம் வகுப்பு வரை 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வருகிற கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பும் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த பள்ளி நிர்வாகம் கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கித்தரும்படி மாவட்ட கலெக்டரிடம் கேட்டு வருகிறது.
அரசு மேல்நிலை பள்ளி
இந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் தற்போது 6-ம்வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 281 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு தற்போது 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதாகவும், அதனால் கூடுதல் தேவைக்காக 3 பரிசோதனைக்கூடங்கள் 4 வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது. அத்துடன் ஆசிரியர்கள் அறை சத்துணவுக்கூடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும்நிலையில், இந்த பள்ளிக்கே வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ள நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கூடுதல் வகுப்பறைகளை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த 2 பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ராஜேந்திரா சாலை பகுதியிலும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு கல்பனா சாலைப்பகுதியிலும் பிரதான நுழைவாயில்  உள்ளது. இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் மெயின் கேட்டை, அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் தங்கள் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அந்த கேட்டை அந்த பள்ளி நிர்வாகம் பூட்டி விடுவதாகக்கூறப்படுகிறது.
 சாலை மறியல்
இந்த நிலையில் இந்த மெயின் கேட் பிரச்சினை மற்றும் வகுப்பறைகள் பற்றாக்குறை பிரச்சினையை முன்வைத்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று காலையில் வகுப்புகளுக்கு செல்லாமல் பள்ளிக்கு முன்பு உள்ள ராஜேந்திரா சாலைக்கு முன்பு திரண்டனர்.அவர்கள் திடீரென்று சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளி வளாத்திலேயே நின்றிருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், ராஜ்கணேஷ், ஆகியோர் அங்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.

Next Story