கவுன்சிலர்கள் ஊர்வலமாக வர தடை
தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வாக்களிக்க வரும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக வர தடை விதித்து தேர்தல் நடத்தும் அலுவலர் குகன் உத்தரவிட்டுள்ளார்.
வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வாக்களிக்க வரும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக வர தடை விதித்து தேர்தல் நடத்தும் அலுவலர் குகன் உத்தரவிட்டுள்ளார்.
மறைமுக தேர்தல்
தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடந்தது. இதில் தி.மு.க. 7 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிக்க இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
ஆலோசனை கூட்டம்
இதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சிமன்ற தலைவர் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலரும் குகன் தலைமை தாங்கினார். தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் குகன் கூறியதாவது:-.
பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள சின்ன சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு கடைத்தெரு வழியே மாற்றி விடப்பட்டுள்ளது. தலைஞாயிறு பகுதிக்குள் வெளியூர் வாகனங்கள், வெளியூர் நபர்கள் தேவையின்றி உள்ளே நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் பறிமுதல்
நகரில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அதன்பிறகு அனுமதிக்கப்படும். அப்போது வாகனங்களில் உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தால் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தலுக்கு வாக்களிக்க வரும் கவுன்சிலர்கள் ஊர்வலமாக வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உறுப்பினர்கள் பேனா, கைப்பை, குடிநீர் பாட்டில் எடுத்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வருபவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைஞாயிறு முக்கிய வீதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story