ரஷியா- உக்ரைன் இடையேயான போர் தான் பாமாயில் விலை உயர்வுக்கு காரணம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தகவல்


ரஷியா- உக்ரைன் இடையேயான போர் தான் பாமாயில் விலை உயர்வுக்கு காரணம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தகவல்
x
தினத்தந்தி 3 March 2022 11:32 PM IST (Updated: 3 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

ரஷியா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தான் பாமாயில் விலை உயர்வுக்கு காரணம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நாமக்கல்:
ரஷியா- உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தான் பாமாயில் விலை உயர்வுக்கு காரணம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. சேலம் மண்டல தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் எஸ்.கே.பெரியசாமி, மாநில மூத்த துணை தலைவர் எஸ்.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்று பேசினார்.
இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- வருகிற மே மாதம் 5-ந் தேதி திருச்சியில் வணிகர் தின மாநில மாநாடு நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
திருப்புமுனை மாநாடு
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கடை வாடகை பிரச்சினை தீராத ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு மாநாட்டில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடைகள் நடத்த 7, 8 இடங்களில் லைசென்ஸ் வாங்கவேண்டி உள்ளது. ஒரே லைசென்ஸ் போதும் என அறிவிக்ககோரியும், அதையும் எளிதில் ஆன்லைனில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம். நிச்சயமாக இந்த மாநாடு வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதாகவும், திருப்பு முனையை ஏற்படுத்தும் மாநாடாகவும் இருக்கும்.
ரஷியா- உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால், பாமாயில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த விலை ஏற்றத்துக்கு வியாபாரிகள் பொறுப்பு இல்லை. சிறு கடைகள் வைத்துள்ளவர்கள் எப்போதும் பொருட்களை பதுக்குவது இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் வேண்டுமானால் பதுக்கலாம். அவற்றை அரசு கண்காணிக்க வேண்டும். ரஷியா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் உள்ளது.
பஸ் நிலையம்
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் 13 சதவீத வியாபாரிகள் கடைகளை காலி செய்துவிட்டனர். 27 சதவீதம் பேர் தள்ளாடி கொண்டு இருக்கிறார்கள். 40 சதவீதம் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து காணப்படுகிறார்கள். எங்களது மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பேன் என அறிவித்து இருப்பதால் எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறோம்.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் தற்போது உள்ள பஸ்நிலையம் அனைவருக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இதை மாற்றினால் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மஞ்சப்பையை பொறுத்தவரையில் வரிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேரமைப்பின் மாநில நிர்வாகிகள், சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story