முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது; ஜி.கே.வாசன் பேட்டி
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை அரசு விட்டு கொடுக்க கூடாது என்று வேலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
வேலூர்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை அரசு விட்டு கொடுக்க கூடாது என்று வேலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ஜி.கே.வாசன் பேட்டி
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த வேலூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணித்தலைவர் எஸ்.சீனிவாசன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டின் சிக்கியுள்ள இந்தியவாழ் மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. அங்குள்ள மற்ற அனைவரையும் குறிப்பிட்ட காலத்துக்குள் மீட்க வேண்டும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும். எந்தநாட்டின் மீதும் போர் தொடுக்க கூடாது என்பதுதான் இந்திய நாட்டின் விருப்பமாகும்.
தி.மு.க. ஆட்சியில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதனை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரம், பண பலத்தால் தி.மு.க. நகர்ப்புற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது மக்களின் தீர்ப்பு என்றாலும் கூட, அவர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்களாக தி.மு.க. செயல்பட வேண்டும்.
முல்லை பெரியாறு அணை
வேலூர் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதையும், அவற்றை மறைமுகமாக எரிப்பதையும் மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
பாதாள சாக்கடைநீர் பாலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை அக்கறையை கருத்தில் கொண்டு நகரம், கிராமப்புற பகுதிகளில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியோடு செயல்பட வேண்டும். தமிழகத்தின் உரிமையை அரசு விட்டு கொடுக்க கூடாது.
அ.தி.மு.க.வில் சசிகலா?
தமிழகத்தில் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது த.மா.கா. வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.ஜெ.மூர்த்தி, மாநில மகளிரணி துணைத்தலைவர் கீதா தேசபக்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story