புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தத்தில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் காமராஜர் பாலம் அருகே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பின்பக்கம் உள்ள கட்டிடத்தில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக டாஸ்மாக் உயர்ரக எலைட் மதுபானக்கடை இயங்கி வந்தது.
இந்தநிலையில் எலைட் மதுபானக் கடைக்கு அருகே உள்ள மற்றொரு கடையில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை திடீரென நேற்று முன்தினம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடையால் பொதுமக்களும் அந்த வழியாக செல்லும் பெண்களும், மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிதாகத் திறந்த டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், டாஸ்மாக் கடையை மூட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். உயர் அதிகாரிகள் உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என ஊழியர்களுக்கு போலீசாா் அறிவுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story