புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி தலைவர்- துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
புதுக்கோட்டை,
மறைமுக தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க. 24 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், அ.தி.மு.க. 8 இடங்களையும், அ.ம.மு.க. மற்றும் விஜய் மக்கள் இயக்கம் தலா ஒரு இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தலைவர் பொதுப்பிரிவில் பெண்ணும், துணைத்தலைவர் பதவியில் ஆணும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த 2 பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் மறைமுகமாக வாக்களிப்பார்கள்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சியில் தி.மு.க.வில் 24 கவுன்சிலர்களும், கூட்டணி கட்சியான காங்கிரசில் 3 கவுன்சிலர்களும் உள்ளனர். இது தவிர சுயேச்சைகளில் தி.மு.க. ஆதரவாளர்கள் 3 பேர் உள்ளனர். இதனால் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க.வே கைப்பற்றுகிறது.
புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திலகவதி (45) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பி.காம் பட்டதாரியான இவர் 25-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவருடைய கணவர் செந்தில் குமார் தி.மு.க. மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும், ம.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் ஒருவரும், தே.மு.தி.க. கவுன்சிலர் ஒருவரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில், அறந்தாங்கி நகராட்சி தலைவர் பதவிக்கு ஆனந்த் (47) என்பவர் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 8-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவர் 18 வயது முதல் தி.மு.க.வில் இருந்து வருகிறார். வட்ட செயலாளர், மாவட்ட பிரதிநிதி ஆகிய பொறுப்பில் இருந்து தற்போது அறந்தாங்கி நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நித்தியா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
துணைத்தலைவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் அரிமளம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர், கீரமங்கலம், ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் பேரூராட்சி மற்றும் நகராட்சி துணைத்தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story