திசையன்விளை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்
திசையன்விளை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ஜான்சிராணி, ஜெயகுமார், ஆறுமுகதேவி, பிரதீஷ்குமார், உமா, சண்முகவேல், முத்துகுமார், பிரேம்குமார், தனசீலி புவனேஸ்வரி ஆகிய 9 பேரும் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நடந்த தேர்தலில் நாங்கள் 9 பேரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பதவி ஏற்றுவிட்டோம். பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4-ந்தேதி (அதாவது இன்று) நடக்கிறது. பா.ஜ.க. உறுப்பினரையும் சேர்த்து எங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் ஆளுங்கட்சி மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டும் இருப்பதால், அவர்களால் இந்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை.
இதனால் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவு தர வேண்டும் என்று எங்கள் தரப்பில் உள்ளவர்களை மிரட்டுகின்றனர். எச்சரிக்கை தகவல்களை அனுப்பி வருகின்றனர். தேர்தலின்போது எதிர் தரப்பினர் சார்பில் முகம் தெரியாத நபர்கள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது.
எனவே திசையன்விளை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்து, தேர்தலை அமைதியான முறையில் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேருக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அளிக்க வேண்டும். இந்த தேர்தலை கண்காணித்து அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Related Tags :
Next Story