பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் கே.கே.சாலை பார்த்தசாரதி லே-அவுட் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 18.4.2017 அன்று வீட்டில் தனியாக இருந்தார்.
அந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன் போடுவதற்காக விழுப்புரம் வி.மருதூர் தர்மராஜா தெருவை சேர்ந்த ஆசைக்கனி மகன் பிரபு என்கிற செல்வபிரபு (33) என்பவர் வந்தார். அப்போது அந்த பெண், வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பிரபு, அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரபு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.