தி.மு.க.வின் 26 ஆண்டுகால கனவு நிறைவேறுகிறது
மேயர் பதவியை பிடிப்பதன் மூலம் தி.மு.க.வின் 26 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது.
திருச்சி
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 49 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்று திருச்சி மாநகராட்சியை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 5 வார்டுகளையும், ம.தி.மு.க. 2 வார்டுகளையும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், அ.ம.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.அன்பழகனும், துணை மேயர் பதவிக்கு திவ்யாயும் வேட்பாள ராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியாவதற்கு முன்பு நகராட்சியாக இருந்தபோது, 1986-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. முதல் முறையாக திருச்சி நகராட்சியை கைப்பற்றியது. தி.மு.க.வை சேர்ந்த மா.பாலகிருஷ்ணன் திருச்சி நகராட்சி தலைவராக 1991-ம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் தனி அதிகாரிகள் பொறுப்பில் இருந்த திருச்சி நகரசபை 1994-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முதல் மேயர்
அப்போது திருச்சி நகரையொட்டி இருந்த ஸ்ரீரங்கம் நகராட்சி, பொன்மலை நகராட்சி மற்றும் சில பேரூராட்சிகள், பஞ்சாயத்துக்கள் எல்லாம் கலைக்கப்பட்டு திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பின்னர் திருச்சி மாநகராட்சிக்கு 1996-ம் ஆண்டு முதன்முதலில் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த புனிதவல்லி பழனியாண்டி வெற்றி பெற்று மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார்.
அதன்பிறகு 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாருபாலா தொண்டைமான் வெற்றி பெற்று மேயர் ஆனார். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடைபெறவில்லை. கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு சாருபாலா தொண்டைமானை மீண்டும் மேயராக தேர்ந்தெடுத்தனர். ஆனால் 2009-ம் ஆண்டு அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஜாதா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வரை மேயராக பதவி வகித்து வந்தார்.
அ.தி.மு.க.
அதன்பிறகு 2011-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்து மாநகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயா மேயரானார். ஒவ்வொரு முறையும் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை அனுசரித்து மேயர் பதவியை தொடர்ந்து விட்டு கொடுத்து வந்தது. இதில் 2 முறை மட்டும் தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன் துணைமேயராக இருந்தார்.
தி.மு.க. கனவு நிறைவேறுகிறது
இந்தநிலையில் தற்போது திருச்சி மேயர் பதவியை பொதுப்பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வின் மு.அன்பழகன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் தி.மு.க.வின் 26 ஆண்டு கனவு நிறைவேறுகிறது. இதனால், கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story