மதுரை கலைஞர் நூலகத்தில் அமையும் வசதிகள் என்ன?


மதுரை கலைஞர் நூலகத்தில் அமையும் வசதிகள் என்ன?
x
தினத்தந்தி 4 March 2022 3:16 AM IST (Updated: 4 March 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தயாராகி வரும் கலைஞர் நூலகத்தில் இருக்கும் வசதிகள் என்ன என்பது குறித்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மதுரை, 
மதுரையில் தயாராகி வரும் கலைஞர் நூலகத்தில் இருக்கும் வசதிகள் என்ன என்பது குறித்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கலைஞர் நூலகம்
மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப் படுவதற்கான பணிகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வாளகம், ரெயில் நிலையம், கே.கே.நகர் பூங்கா உள்ளிட்ட இடங்களில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு, கலைஞர் நூலகத்தில் என்னென்ன வசதிகள் வரப்போகிறது என்பது குறித்து கேட்டறிவதற்காக நேற்று காலை அங்கு வந்தனர். 
அந்த மாணவர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் சத்திய மூர்த்தி, செயற்பொறியாளர் இரணியன், உதவி செயற் பொறியாளர்கள் தங்கவேல், முருகன், சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள், மாணவர் களிடம் கூறியதாவது:-
"தென் மாவட்ட மக்களுக்கு மதுரையில் அமையும் கலைஞர் நூலகம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது 2 தளங்கள் வரை கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்தளம் அமைக்கப்படுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது.
2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள்
7 தளங்கள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப் பட்ட முறையில் வடிவமைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்த கங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படுகிறது.
நூலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு உள்ளது. 4 லிப்ட், எஸ்கலேட்டர் வசதியும் உள்ளது. கண்காணிப்புக்காக 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு தளத்திலும் கழிவறை, குடிநீர் வசதி இருக்கும். முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளங்களில் போட்டி தேர்வுகளுக்க தயாராகும் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிரவும் ஒவ்வொரு தளத்திலும் தனித்தனி அறைகள் உள்ளன. ஒரே சமயத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் 1500 மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியும். குழந்தைகளின் திறன் மேம்படுத்துவதற்கும் குழந்தைகள் நூலகங்களும் உள்ளன. கலைஞர் எழுதிய புத்தகங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது.
வை-பை வசதி
2-வது தளத்தில் தமிழ் இலக்கியம் உள்ளிட்ட 27 துறை சார்ந்த புத்தகங்களும், வாசிப்பதற்கு தனி இடங்களும், 3-வது தளத்தில் ஆங்கிலம் மற்றும் என்ஜினீயரிங் தொடர்பான அனைத்து புத்தகங்களும் இருக்கும். பழமையான வரலாறு புத்தகங்களும் உள்ளன. அனைத்து தளங்களிலும் வை-பை வசதி உள்ளது. மாணவர்கள், மடிக்கணினி கொண்டு வந்து அதன் மூலமும் ஆன்லைன் தொடர்பாகவும் படித்து கொள்ளலாம். 
எல்லா தளத்திலும் புத்தகங்களை இலவசமாக பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 4-வது தளத்தின் முகப்பு பகுதியில் மரத்தடியின் கீழ் புல்தரையில் அமர்ந்து படிப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது. அந்த இடத்திலும் அமர்ந்து மாணவர்கள் படிக்கலாம். ஆராய்ச்சி மாணவர் களுக்கு தனித்தனியான புத்தகங்களும், 5-வது மாடியில் குரூப் -1, குரூப்-2 போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தினமும் தனித்தனி சிறப்பு தேர்வுகள் நடைபெறும். அதன் மூலம் மாணவர்களின் திறனை அறிந்து கொள்ளலாம். அதுதவிர மாணவர்கள் கொண்டு வரும் புத்தகங்களை பென்டிரைவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும், "லைப்ரரி" ஸ்டுடியோ என்ற பகுதியும் உள்ளது. அங்கு தொலைக்காட்சிகளில் பேசுவது போன்ற பயிற்சி வழங்கப்படும். மாணவர்கள் கொண்டு வரும் புத்தகங்கள் பைண்டிங் செய்து கொடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும் வெளியிடப்படும்.
எந்த தளத்தில் எந்த புத்தகம்
ஒவ்வொரு தளத்திலும் பி.எம்.எஸ். எனப்படும் எந்திரம் உள்ளது. அதன் மூலம் எந்த புத்தகம் எந்த இடத்தில் என்பதை கண்டறியமுடியும். இது மாணவர்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும். 7-வது தளத்தில் நூலகத்திற்கான அலுவலர்கள், பணியாளர்களுக்கான அறைகள் உள்ளன. மேலும் ஒளி-ஒலி அமைப்புகளுடன் சிறிய அளவிலான அறைகள், கட்டிடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் 2 கூட்ட அறைகள், குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி-ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகளும் உள்ளது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமைய இருக்கிறது. இதனை மாணவர்கள் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்' என்றனர்.
மதுரை மாவட்டம் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு கலைஞர் நூலக பணிகளை பார்வையிட்டனர்.

Next Story