உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போதைய நிலை என்ன?; மீண்டு வந்த ராய்ச்சூர் மாணவர் பரபரப்பு பேட்டி
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மீண்டு வந்த ராய்ச்சூர் மாணவர் அங்கு தற்போது நிலவும் நிலை குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெங்களூரு: உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மீண்டு வந்த ராய்ச்சூர் மாணவர் அங்கு தற்போது நிலவும் நிலை குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குண்டு வெடித்தது
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சிக்கித்தவித்தவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவர் லட்சுமி நாராயண். அவர் போர் களத்தில் இருந்து பத்திரமாக ராய்ச்சூர் வந்து சேர்ந்துள்ளார். கார்கிவ் நகரில் நிலவும் சூழ்நிலை குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கார்கிவ் நகரில் நிலைமை மோசமாகியுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் குண்டு சத்தம் கேட்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் செத்து வருகிறார்கள். உக்ரைன் ராணுவத்தினர் தீவிரமாக போரிட்டு வருகிறார்கள். அந்த நகரை ரஷியா இன்னும் கைப்பற்றவில்லை. நான் இருந்த பகுதியில் குண்டு வெடித்தது. நான் விடுதியில் இருந்தபோதே பக்கத்து கட்டிடத்தில் பெரிய குண்டு வெடித்தது. அதில் ஒரு கார் சின்னபின்னமானது. சிலர் பாதிக்கப்பட்டனர். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது.
தொந்தரவு கொடுக்கவில்லை
போர் தொடங்கியதும் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. உடனே பல்பொருள் அங்காடிக்கு சென்று தேவையான உணவு பொருட்களை நாங்கள் வாங்கி வைத்து கொண்டோம். ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கினோம். 2-வது நாளிலேயே தாக்குதல் தீவிரமடைந்தது. அதனால் நாங்கள் பதுங்கு குழியில் தங்கினோம். நான் கார்கிவ் நகரில் இருந்து 3 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு ரெயில் மூலம் ஹங்கேரிக்கு வந்தோம்.
ரெயிலில் கடும் கூட்ட நெரிசல் இருந்தது. அந்த சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு பயணித்து உக்ரைன் எல்லை பகுதிக்கு வந்தோம். உள்ளூர் மக்கள் எங்களுக்கு யாரும் எந்த பிரச்சினையும் கொடுக்கவில்லை. உள்ளூர் மக்கள் உதவி செய்தனர். உக்ரைன் மக்கள் உணவு உள்ளிட்டவற்றை கொடுத்தனர். உக்ரைன் மக்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை.
இறந்தவர்களின் உடல்கள்
ரஷியாவுக்கு அழைத்து செல்வதாக தகவல் வந்தது. ஆனால் அது உண்மையா என தெரியவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. கார்கிவ் நகரில் மட்டும் இந்தியர்கள் 4,000 பேர் இருந்தனர். இன்னும் 300 பேர் அந்த நகரில் தான் இருக்கிறார்கள். எனது நண்பர்கள் பலர் இன்னும் கார்கிவ் நகரில் சிக்கியுள்ளனர். உயிரிழந்த நவீன் எனக்கு நண்பர் தான். நாங்கள் முதல் ஆண்டில் ஒரே கட்டிடத்தில் வசித்தோம்.
போர் களத்தில் இறந்தவர்களின் உடல்களை வழங்க உக்ரைன் நாடு தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் அரசுகள் முயற்சி செய்தால் உடலை கொண்டுவர முடியும். நவீன் உடல் கொண்டு வரப்பட்டால் நான் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வேன்.
இவ்வாறு லட்சுமி நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story