வாலிபர் உள்பட 2 பேரிடம் ரூ.2½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
வாலிபர் உள்பட 2 பேரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவருடைய தந்தை டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த 1-ந் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் கிரானைட் கற்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பிய கிருஷ்ணமூர்த்தி குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி எண்ணுக்கு 2 தவணையாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அனுப்பினார். ஆனால் கிரானைட் கற்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. இதையடுத்து மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). அவருடைய செல்போன் எண்ணுக்கு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் ஒரு வங்கி அதிகாரி என்றும், உங்களது பழைய கிரெடிட் கார்டுக்கு பதிலாக சலுகையுடன் கூடிய புதிய கிரெடிட் கார்டு கொடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரிடம் அனைத்து தகவல்களையும் செந்தில்குமார் தெரிவித்தார். இதையடுத்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து 2 தவணையாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 128 அபேஸ் செய்யப்பட்டது. இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story