டெல்லி வந்த பிறகு மறுபிறவி எடுத்ததைப்போல் இருந்தது- உக்ரைனில் இருந்து திரும்பிய அந்தியூர் மாணவி உருக்கமான பேட்டி
டெல்லி வந்த பிறகு மறுபிறவி எடுத்ததைப்போல் இருந்தது என்று உக்ரைனில் இருந்து திரும்பிய அந்தியூர் மாணவி மவுனிசுகிதா உருக்கமாக கூறினார்.
அந்தியூர்
டெல்லி வந்த பிறகு மறுபிறவி எடுத்ததைப்போல் இருந்தது என்று உக்ரைனில் இருந்து திரும்பிய அந்தியூர் மாணவி மவுனிசுகிதா உருக்கமாக கூறினார்.
மருத்துவ படிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த நாகராஜ் - குணவதி தம்பதியின் மகள் மவுனி சுகிதா (வயது 20). இவர் உக்ரைனில் உள்ள லையு நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் பல்வேறு சிரமங்களை கடந்து இந்தியாவுக்கு திரும்பினார். அவரது பயண அனுபவம் குறித்து கூறியதாவது:-
மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதனால், பிளஸ்-2 படிக்கும்போதே, நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். 2018-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால் அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க சுமார் ரூ.1 கோடி வரை செலவாகும் என்று கூறினார்கள். உக்ரைன் நாட்டில் ரூ.40 லட்சம் செலவிலேயே மருத்துவ கல்வியை படித்து முடித்து விட முடியும். எனவே உக்ரைன் நாட்டின் லீவ் பகுதியில் உள்ள லையு நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி படிப்பதற்காக சேர்ந்தேன். தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகிறேன்.
விமானங்கள் ரத்து
உக்ரைனில் நானும், எனது நண்பர்களும் தனி வீடு எடுத்து தங்கி இருந்தோம். போர் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு, மாணவ-மாணவிகள் விரும்பினால் நாடு திரும்பி கொள்ளலாம் என்று பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அப்போதே விமான கட்டணம் ரூ.1 லட்சம் வரை அதிகரித்து விட்டது. நேரடி விமானம் கிடைக்காத நிலையில், துருக்கி - சார்ஜா வழியாக இந்தியா வர முயற்சித்தோம். துருக்கியில் இந்தியர்களுக்கு விசா கொடுக்கவில்லை. இதற்காக ரூ.40 ஆயிரம் செலவு செய்து விமான டிக்கெட் பதிவு செய்தது வீணாகி போய்விட்டது.
அதன்பிறகு போர் தொடங்கியதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. வீட்டில் இருக்கும்போது சைரன் ஒலித்தால் உடனே பதுங்கு குழிகளுக்கு ஓடிச்செல்வோம். சிறிதுநேரம் கழித்து வீடு திரும்புவோம். நாங்கள் இருந்த பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் பதற்றமான நிலை தொடர்ந்து காணப்பட்டது.
தேசியக்கொடி
இந்தநிலையில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலந்து நாட்டுக்கு செல்ல முடிவு செய்தோம். ஆனால், ஏற்கனவே 25-ந் தேதி கிளம்பி அங்கு சென்ற எனது நண்பர்கள் 20 மணிநேரத்திற்கு மேல் ‘மைனஸ்’ 4 டிகிரி குளிரில் காத்துக்கொண்டு இருப்பதை அறிந்து கொண்டோம். அங்கு கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் நண்பர்கள் அவதிப்பட்டனர். இதனால் போலந்து நாட்டுக்கு செல்லும் முடிவை கைவிட்டோம். தினம், தினம் போர் பயத்தில் உறைந்து கிடந்த நாங்கள், எப்படியாவது தாய் நாட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். கடந்த 28-ந் தேதி மதியம் தமிழகத்தை சேர்ந்த 24 மாணவர்கள் ஒரு பஸ்சை ஏற்பாடு செய்து அங்கிருந்து புறப்பட்டோம். சுமார் 5 மணி நேரம் பயணித்து ஹங்கேரி எல்லைக்கு சென்றோம். எங்களிடம் இந்திய நாட்டின் தேசியக்கொடி இல்லை. எனவே ஒரு காகிதத்தில் தேசியக்கொடியை வரைந்து பஸ்சின் முன்பு ஒட்டிக்கொண்டோம். இதனால் எந்தவொரு தடையின்றி ஹங்கேரிக்கு செல்ல முடிந்தது.
20 மணிநேரம்
ஹங்கேரி எல்லையில் உள்ள உக்ரைன் நாட்டின் சோப் ரெயில் நிலையத்துக்கு மாலை 7 மணிக்கு சென்றோம். அங்கு டிக்கெட் வாங்கிவிட்டு, பாஸ்போர்ட்டில் முத்திரை பெற்றால் மட்டுமே ரெயில் மூலமாக உக்ரைன் எல்லையை கடந்து ஹங்கேரியை அடைய முடியும். ரெயில்நிலையத்தில் டிக்கெட் பெறுவதற்கு மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ரெயில் டிக்கெட் பெறுவதற்கு நாங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தோம்.
எல்லையை கடப்பதற்கு உக்ரேனியர்கள் 5 பேருக்கு ரெயில் டிக்கெட் கொடுத்தால், வெளிநாட்டினருக்கு ஒருவருக்கு தான் டிக்கெட் கொடுக்கின்றனர். எனவே 20 மணி நேரத்திற்குமேல் காத்திருந்து ஒருவழியாக டிக்கெட்டை பெற்றோம். அதன்பிறகு ரெயிலில் ஏறி ஹங்கேரியை சென்றடைந்தோம். ஹங்கேரியில் இறங்கியதும் உணவு, குளிர்பானம் கொடுத்து அந்த நாட்டு மக்கள் எங்களை அன்புடன் உபசரித்தனர். அங்கிருந்து ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்ட் நகருக்கு மற்றொரு இலவச ரெயிலில் பயணித்தோம். அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை விடுதிகளில் தங்க வைத்தனர்.
அங்கு பணியில் உள்ள அதிகாரிகள் இந்தி மட்டுமே பேசுவதால், வடமாநில மாணவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. 1-ந் தேதி இரவு விமானம் மூலமாக எங்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தோம். சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தபோது பெற்றோரும், உறவினர்களும் எங்களை கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.
மறுபிறவி
சினிமாவில் பார்ப்பதைபோல உக்ரைனில் இருந்து இந்தியாவுக்குள் வரும்வரை உயிரை கையில் பிடித்து கொண்டு வருவதைபோன்று பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. டெல்லி வந்த பிறகு எங்களுக்கு மறுபிறவியே எடுத்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. நாங்கள் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு உக்ரைன் நாட்டுக்கு படிக்க சென்றோம். அங்கு இருந்தபோது போரின் தீவிர தன்மையை முன்பே அறிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் எங்களால் உடனடியாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு வந்தபிறகு போர் தொடங்குவது என்று தெரிவதற்கு முன்பே அங்கிருந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
இவ்வாறு மாணவி மவுனிசுகிதா கூறினார்.
Related Tags :
Next Story