காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை திமுககைப்பற்றியது


காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர்  பதவியை திமுககைப்பற்றியது
x
தினத்தந்தி 4 March 2022 6:41 PM IST (Updated: 4 March 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை திமுககைப்பற்றியது

காங்கேயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க10, காங்கிரஸ்1, அ.தி.மு.க4, சுயேச்சை3 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து காங்கேயம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க. தலைமை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. 
இந்த நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தி.மு.க கட்சியைச் சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் ந.சூர்யபிரகாஷ், 10வது வார்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ந.ஹேமலதா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா வேட்புமனுவை முன் மொழிவோர், வழி மொழிவோர் யாரும் இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. வைச் சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் சூர்யபிரகாஷ் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவர்
இதையடுத்து காங்கேயம் நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மதியம் 2.30 மணிக்கு நகராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 4-வது வார்டு கவுன்சிலர் அ. இப்ராகிம் கலீலுல்லா, 16வது வார்டு கவுன்சிலர் ர.கமலவேணி, 8-வது வார்டு கவுன்சிலர் கு.வளர்மதி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில் 4வார்டு கவுன்சிலர் அ. இப்ராகிம் கலீலுல்லா 12 வாக்குகளும், 16வது வார்டு கவுன்சிலர் ர.கமலவேணி 1 வாக்கும், 8-வது வார்டு கவுன்சிலர் கு.வளர்மதி 3 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து நகராட்சி துணைத்தலைவர் போட்டியில் 12 வாக்குகள் பெற்ற 4வார்டு கவுன்சிலர் அ. இப்ராகிம் கலீலுல்லா நகராட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து காங்கேயம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ந.சூர்யபிரகாஷ், துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ. இப்ராகிம் கலீலுல்லா ஆகியோருக்கு காங்கேயம் நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story