திருச்செந்தூர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்: ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சந்தித்ததால் பரபரப்பு
திருச்செந்தூர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிைய சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி தரிசனம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கோவிலில் பூஜைகள் முடிந்ததும் சிறிதுநேரம் அமர்ந்து தியானம் செய்தார். கோவிலை சுற்றி வந்து வணங்கிய அவர், அங்குள்ள சிவன் கோவில், விநாயகர் கோவிலிலும் வழிபட்டார். பின்னர் கடற்கரையில் உள்ள தில்லையம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மாலையில் சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இளவரசி, அவருடைய மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பு
முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் சசிகலா தங்கினார். அப்போது அதே விடுதிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் வந்தார். அவர், சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சசிகலா சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story