மறைமுக தேர்தலில் தி மு க வேட்பாளர் வெற்றி உளுந்தூர்பேட்டை நகரசபை தலைவராக முன்னாள் எம் எல் ஏ திருநாவுக்கரசு பதவி ஏற்பு
மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றதை அடுத்து உளுந்தூர்பேட்டை நகரசபை தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு பதவி ஏற்றுக்கொண்டார். துணை தலைவராக வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டார்
உளுந்தூர்பேட்டை
24 வார்டுகள்
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், ம.தி.மு.க. மற்றும் வி.சி.க. தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றதால் உளுந்தூர்பேட்டை நகராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் கடந்த 2-ந்தேதி நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நகரசபை தலைவர்
இந்த நிலையில் நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காலையில் நகரசபை தலைவருக்கான தேர்தலும், மாலையில் துணை தலைவருக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை நகரசபை தலைவராக 19-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருநாவுக்கரசு போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அவருக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், நகரசபை ஆணையருமான சரவணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை தலைவர்
இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், ஒன்றிய செயலாளருமான வைத்தியநாதன் தேர்வுசெய்யப்பட்டார். அவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கு சக கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முதல் முறையாக
உளுந்தூர்பேட்டை நகராட்சி முன்பு பேரூராட்சியாக இருந்தபோது தி.மு.க. ஒருமுறை கூட கைப்பற்றியதே இல்லை. ஆனால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் தற்போதுதான் முதல் முறையாக உளுந்தூர்பேட்டை நகரசபை தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story