வைகை அணையில் தொடர்ந்து 9 மாதங்களாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 9 மாதங்களாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி:
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இதுதவிர மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வைகை அணை முக்கிய பங்கு வகிக்கிறது.
வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் போகம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அணையில் நீர்இருப்பு அதிகம் இருந்தால் ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும்.
பரவலாக மழை
ஆனால் வைகை அணை பயன்பாட்டிற்கு வந்த 64 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் 3 போகத்திற்கும் முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்தது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
முதல்முறை
இதையடுத்து தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 9 மாதங்களாக ஒருபோகத்திற்கும், அதனை தொடர்ந்து இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை வரலாற்றில் தொடர்ந்து 9 மாதங்களாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
வைகை அணை நிரம்பினால் 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். ஆனால் கடந்த 9 மாதங்களில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக மட்டும் 23 ஆயிரத்து 620 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 9 மாதங்களில் வைகை அணையின் நீர் இருப்பை விட 3 மடங்கு தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.2்6 அடியாகவும், நீர்வரத்து 171 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,384 மில்லியன் கனஅடியாக உள்ளது.
Related Tags :
Next Story