மறைமுக தேர்தலில் தி மு க வேட்பாளர் வெற்றி கள்ளக்குறிச்சி நகரசபை தலைவராக சுப்ராயலு பதவி ஏற்பு
கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சுப்ராயலு பதவி ஏற்றுக்கொண்டார். துணை தலைவராக ஷமிம்பானு அப்துல்ரசாக் தேர்வு செய்யப்பட்டார்
கள்ளக்குறிச்சி
21 வார்டுகள்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், காங்கிரஸ், அ.ம.மு.க. தலா ஒரு வார்டுகளிலும் வெற்றிபெற்றது.
இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றதால் கள்ளக்குறிச்சி நகராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. இதில் வெற்றிபெற்ற அனைத்து கவுன்சிலர்களும் கடந்த 2-ந் தேதி நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மறைமுக தேர்தல்
இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நே்றறு நடைபெற்றது. முன்னதாக காலையில் நகரசபை தலைவர் பதவிக்கும், மாலையில் துணை தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
நகரசபை தலைவர்
காலையில் நடைபெற்ற நகரசபை தலைவர் பதவிக்கான தேர்தலில் 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்ராயலு, அ.தி.மு.க. சார்பில் 11-வது வார்டு கவுன்சிலர் பாபு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்ராயலு 16 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாபு 5 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நகரசபை தலைவராக தேர்வுசெய்யப்பட்ட சுப்ராயலுவுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குமரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை தலைவர்
தொடர்ந்து மதியம் நடைபெற்ற துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷமிம்பானு அப்துல்ரசாக் தேர்வு செய்யப்பட்டார். அவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோருக்கு வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் சக கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வாழ்க்கை குறிப்பு
கள்ளக்குறிச்சி நகரசபை தலைவர் சுப்ராயலு(வயது 60). பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவர் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நகர தி.மு.க. செயலாளராக இருந்து வரும் இவருக்கு மேனகாஎன்ற மனைவியும், கஸ்தூரி, கல்பனா, கார்த்திகா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
அதேபோல் துணை தலைவர் ஷமிம்பானு(வயது 48) கணவர் பெயர் அப்துல் ரசாக். இவர்களுக்கு ஆதம் செரீப், அம்ருதீன், அஜிமாபீ, அகமதுஷெரீப் ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர். அப்துல் ரசாக் தி.மு.க. வார்டு செயலாளராக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கள்ளக்குறிச்சி நகராட்சியில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது முதல் முறையாக நகரசபை தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story