எஸ்.வாழவந்தி அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


எஸ்.வாழவந்தி அருகே  கணவன், மனைவி  தூக்குப்போட்டு  தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2022 11:19 PM IST (Updated: 4 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.வாழவந்தி அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர்:
எஸ்.வாழவந்தி அருகே வயது முதிர்வு, நோய் காரணமாக கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயி
எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 79). விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள் (70). ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2 பேரும் வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சையில் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக கணவன், மனைவி வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டனர். 
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் பெரியசாமியும், மனைவி காளியம்மாளும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கணவன், மனைவி 2 பேரும் கயிற்றால் தனித்தனியாக தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
சோகம்
இதுகுறித்து உடனடியாக அவரது மகன்கள் மணி மற்றும் சின்னுசாமி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வீட்டுக்கு விரைந்து வந்த மகன்கள் தாய்- தந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயது முதிர்வு மற்றும் நோயால் அவதிப்பட்ட கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story