தேனி அ.தி.மு.க.வினர் சுயபரிசோதனை செய்துள்ளனர்; டி.டி.வி.தினகரன் பேட்டி


தேனி அ.தி.மு.க.வினர் சுயபரிசோதனை செய்துள்ளனர்; டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 5 March 2022 12:06 AM IST (Updated: 5 March 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

தேனி அ.தி.மு.க.வினர் சுயபரிசோதனை செய்துள்ளனர் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருவண்ணாமலை

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலைக்கு வந்தார். 

திருவண்ணாமலையில் ஈசான்ய மைதானம் எதிரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கிய அவர் நேற்று காலை ஆரணிக்கு புறப்பட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
அ.தி.மு.க.விற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களை எட்டிப்பார்த்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைப்பு குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது அ.தி.மு.க.வினர் சுயபரிசோதனை செய்துள்ளதை உணர்த்துகிறது. 

அ.தி.மு.க.வின் ஒட்டு மொத்த தலைமையும் ஒருமித்த முடிவு எடுத்து அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைப்பு குறித்து எடுத்து கூறினால் மட்டுமே பதிலளிக்க இயலும். 

யூகங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அதனால் அவசரம் ஏதுமில்லை. 

தி.மு.க. மக்கள் விரோத ஆட்சியை வருகின்ற காலங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று முறியடிப்போம். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story