பேரூராட்சிகளின் தலைவர்- துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது
வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட 3 பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட 3 பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரும் கடந்த 2-ந் தேதி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து நேற்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி மன்ற கூடத்தில் செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 6-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் பூங்கொடிஅலெக்சாண்டர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அ.தி.மு.க சார்பில் 9-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க. கைப்பற்றியது
இதனைத் தொடர்ந்து மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டர் 11 வாக்குகளையும், அ.தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகேயன் 4 வாக்குகளையும் பெற்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மருதுபாண்டியன் 11 வாக்குகளை பெற்ற தி.மு.க.வை சேர்ந்த பூங்கொடி அலெக்சாண்டரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதனையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் முறைப்படி பதவியேற்று கொண்டார். பின்னர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பூங்கொடி அலெக்சாண்டருக்கு சக கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று 2.30 மணி அளவில் மதியம் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் 14 -வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் அன்புச்செழியன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு உறுப்பினர் பிரியங்கா, துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க.வை சேர்ந்த அன்புச்செழியன் 11 வாக்குகளையும், அ.தி.மு.க.வை சேர்ந்த பிரியங்கா 4 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மருதுபாண்டியன், 11 வாக்குகளை பெற்ற தி.மு.க.வை சேர்ந்த அன்புச்செழியன், துணைத் தலைவராக அறிவித்தார். இதனையடுத்து முறைப்படி துணைத ்தலைவராக அன்புச்செழியன் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் சக உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் துணைத் தலைவர் அன்புச்செழியனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
குத்தாலம் பேரூராட்சி தலைவர்
குத்தாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சங்கீதா மாரியப்பன், அ.தி.மு.க. சார்பில் கல்யாணிமணிசுந்தர் ஆகிய 2 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதையடுத்து மறைமுக தேர்தல் நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சங்கீதா மாரியப்பன் 12 வாக்குகளும், அ.தி.மு.க. உறுப்பினர் கல்யாணி மணிசுந்தர் 3 வாக்குகளும் பெற்றனர். இதனால் தி.மு.க. வேட்பாளர் சங்கீதா மாரியப்பன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ரஞ்சித் அறிவித்தார்.
தி.மு.க. கைப்பற்றியது
துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் 2-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சம்சுதீன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் குத்தாலம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது.
இதையடுத்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் குத்தாலம் கடைவீதியில் பட்டாசு வெடித்து பெரியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மணல்மேடு
மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 2-ந் தேதி பேரூராட்சி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில் நேற்று நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கண்மணி அறிவடிவழகன் தலைவர் பதவியையும், சுப்பிரமணியன் துணை தலைவர் பதவியையும் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story