திருவண்ணாமலை நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர் நிர்மலா வெற்றி


திருவண்ணாமலை நகராட்சியில் தி.மு.க. வேட்பாளர் நிர்மலா வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 12:31 AM IST (Updated: 5 March 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகரமன்ற தேர்தலில் தலைவராக நிர்மலா வேல்மாறனும், துணைத்தலைவராக ராஜாங்கமும் வெற்றி பெற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரமன்ற தேர்தலில் தலைவராக நிர்மலா வேல்மாறனும், துணைத்தலைவராக ராஜாங்கமும் வெற்றி பெற்றனர். 

 தி.மு.க. 31 இடங்களில் வெற்றி

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில், தி.மு.க. 31 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் கடந்த 2-ந்தேதி நகரமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் நகரமன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

நகராட்சி அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். 

 தி.மு.க. வெற்றி

நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மறைமுக தேர்தல் வாக்குச்சீட்டின் அடிப்படையில் நடைபெற்றது. இதில், 39 நகரமன்ற உறுப்பினர்களில், ஒரு சுயேச்சை உறுப்பினரை தவிர்த்து மீதமுள்ள 38 உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான பார்த்தசாரதி முன்னிலையில் மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் நிர்மலா வேல்மாறனும், அ.தி.மு.க. சார்பில் அல்லி டிஸ்கோ குணசேகரனும் போட்டியிட்டனர். 

நிர்மலா வேல்மாறன் 32 வாக்குகளும், அல்லி டிஸ்கோ குணசேகரன் 6 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து திருவண்ணாமலை நகராட்சி தலைவராக நிர்மலா வேல்மாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து மரபுப்படி நிர்மலா வேல்மாறனை தலைவர் நாற்காலியில் அல்லி டிஸ்கோ குணசேகரன் அமர வைத்தார். 

பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நிர்மலா வேல்மாறனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 

துணைத்தலைவரும் தி.மு.க.

பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் ராஜாங்கமும், அ.தி.மு.க. சார்பில் சாந்திசரவணனும் போட்டியிட்டனர். இதில், 39 வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 ராஜாங்கம் 33 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சாந்தி சரவணன் 6 வாக்குகள் பெற்றிருந்தார். 

ராஜாங்கத்திற்கு நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி சான்றிதழ் வழங்கினார். அப்போது தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story