திட்டச்சேரி பேரூராட்சி தலைவர்-துணை தலைவராக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி


திட்டச்சேரி பேரூராட்சி தலைவர்-துணை தலைவராக  சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 12:35 AM IST (Updated: 5 March 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணைத்தலைவராக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்

திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சி தலைவர், துணைத்தலைவராக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திட்டச்சேரி பேரூராட்சி
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகள் 8 இடங்களிலும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களிலும், அ.தி.மு.க., ஒரு  இடத்திலும் வெற்றி பெற்றன. 
இதைதொடர்ந்து கடந்த 2-ந் தேதி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்ற பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்தூரி, தி.மு.க.வில் இணைந்தார். இதன் மூலம் சுயேச்சைகள் 8, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 7  என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தனர்.
சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
இந்த நிலையில் நேற்று காலை தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு பாத்திமா பர்வீனும், துணைத்தலைவர் பதவிக்கு தி.மு,.க. கூட்டணி கட்சியான மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த செய்யது ரியாசுதீனும் போட்டியிட்டனர்.
சுயேச்சை உறுப்பினர்கள் சார்பில் தலைவர் பதவிக்கு ஆயிஷா சித்திக்காவும், துணைத்தலைவர் பதவிக்கு நர்கீஸ் பானுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஆயிஷா சித்திக்கா 8 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பாத்திமா பர்வீன் 7 வாக்குகள் பெற்றார். 
பின்னர் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நர்கீஸ் பானு தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செய்யது ரியாசுதீனை விட கூடுதலாக ஒரு வாக்கு பெற்று வெற்றி பெற்றார். 
பதவியேற்றனர்
இதை தொடர்ந்து இருவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் பதவி யேற்றுக்கொண்டனர். 

Next Story