ராமநாதபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கார்மேகம் வெற்றி


ராமநாதபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கார்மேகம் வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 12:55 AM IST (Updated: 5 March 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம் வெற்றி பெற்றார்.துணைத்தலைவராக பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம் வெற்றி பெற்றார்.துணைத்தலைவராக பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் நகராட்சி

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 23 வார்டிலும், காங்கிரஸ் 3 வார்டிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், அ.ம.மு.க. மற்றும் பா.ஜ.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 3 வார்டிலும் வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. தேர்தலை நகராட்சி ஆணையாளர் சந்திரா நடத்தினார். 
இதில் 30-வது வார்டு கவுன்சிலரான ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டு களம் இறங்கினார். இவரை தி.மு.க. கவுன்சிலர்கள் காயத்ரி, ராமநாதன் ஆகியோர் முன்மொழிந்தனர். 

23 வாக்குகள் பெற்று வெற்றி

இந்த நிலையில் இவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 21-வது வார்டு கவுன்சிலர் ராமசுப்பிரமணியன் என்ற அய்யனார் போட்டியிட்டார்.இவரை அ.ம.மு.க. கவுன்சிலர் தனபாண்டியம்மாள், சுயேச்சை கவுன்சிலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்மொழிந்தனர். இதனால் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க 33 கவுன்சிலர்களுக்கும் வாக்கு சீட்டு கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து கவுன்சிலர்களும் வாக்கு செலுத்தி வாக்குசீட்டுகளை பெட்டியில் போட்டனர். உடனடியாக வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்டன. இதில் கார்மேகம் 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராமசுப்பிரமணியன் 9 வாக்கு பெற்று தோல்வி அடைந்தார். 1 ஒட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வெற்றி பெற்ற கார்மேகத்துக்கு அதற்கான சான்றிதழை ஆணையாளர் சந்திரா வழங்கினார். இதை தொடர்ந்து கார்மேகம் நகராட்சி தலைவராக பதவியேற்றுக் கொண்டார். நகராட்சி ஆணையாளர் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் அவரை நகராட்சி தலைவருக்கான இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் நகராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட 7-வது வார்டு கவுன்சிலர் ராமநாதபுரம் தெற்கு தி.மு.க. நகர் செயலாளர் டி.ஆர்.பிரவீன் தங்கம் (வயது 37) வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இவர் போட்டியின்றி நகராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கவுன்சிலர் தேர்தலில் 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ராமநாதபுரம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பனின் பேரனான இவர் 2020 முதல் ராமநாதபுரம் தெற்கு தி.மு.க. நகர் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு சுகிர்தா என்ற மனைவியும், சந்தீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர். வெற்றி பெற்ற நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் ஆகியோருக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story