பெண் மரணம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானேயை கைது செய்ய இடைக்கால தடை கோர்ட்டு உத்தரவு
மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானேயை கைது செய்ய மும்பை கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
மும்பை,
பெண் மரணம் தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கில் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானேயை கைது செய்ய மும்பை கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.
மரணம் குறித்து அவதூறு
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன். இவர் 2020-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி மும்பை மலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்த 6 நாளில் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் சமீபத்தில் திஷா சாலியன் மரணம் தொடர்பாக மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினர். இதில் பத்திரிகையாளர் சந்திப்பில் நாராயண் ரானே திஷா சாலியன் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறினார். இதுதொடர்பாக திஷா சாலியனின் தாய் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே ஆகியோர் திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை பரப்பியதாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்ய தடை
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 2 பேரும் மும்பை தின்தோஷி செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் நேற்று விசாரணையின் போது, தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்த கோர்ட்டு அதுவரை மத்திய மந்திரி நாராயண் ரானே, நிதேஷ் ரானேயை கைது செய்ய வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பி இருந்த போலீசார் இன்று (சனிக்கிழமை) நாராயண் ரானே, நிதேஷ் ரானேவின் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story